×

நூல் விலை உயர்வால் கூடுதல் சலுகை வழங்க வேண்டும்

திருப்பூர், பிப்.2:  நூல் விலை உயர்வால் மத்திய அரசு திட்டத்தில் தற்காலிகமாக கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பின்னலாடை துறையில் 95 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் இருக்கிறது. நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 51 சதவீதம் திருப்பூரின் பங்களிப்பு இருக்கிறது. கடந்த 2019-2020 நிதியாண்டில் ரூ.27,280 கோடியாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டு முடியும் நிலையில் ரூ.24 ஆயிரம் கோடியாக தான் இருக்கிறது.

நூல் விலை தமிழகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆடை தயாரிப்பிற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆடை ஏற்றுமதியாளர்கள், ஆடை ஏற்றுமதிக்கு செலுத்தும் வரிகளை மத்திய அரசு டியூட்டி டிராபேக் என்ற பெயரில் திரும்ப வழங்கி வருகிறது.
இதற்கிடையே மத்திய அரசு ஆர்.ஓ.டி.டி.இ.பி. (திரும்ப பெற முடியாத வரிகள்) என்ற திட்டத்தை செயல்படுத்தி, திரும்ப பெற முடியாத வரிகளை ஏற்றுமதியாளர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தில் எந்தெந்த ஆடைகளுக்கு வரிகள் வழங்கப்படும். எவ்வளவு தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவில்லை.

எனவே, இந்த தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும். எனவே, நூல் விலை உயர்வால், மத்திய அரசு ஆர்.ஓ.டி.டி.இ.பி. என்ற திட்டத்தில் தற்காலிகமாக கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும். இந்த சலுகைகள் வழங்குவதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் உற்பத்தி செலவிற்கு கை கொடுக்கும். ஏற்கனவே, பெற்ற ஆர்டர்களில் நஷ்டம் ஏற்பட்டாலும், இந்த தொகை கிடைப்பதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
× RELATED செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 1.3...